internet

img

நமது நாட்டில் கருத்துகணிப்புகள் அறிவியல் பூர்வமான முறையில் செய்யப்படுவதில்லை - வெங்கடேஷ் ஆத்ரேயா

வாக்களிப்பு முடிந்த பிறகு வாக்கு சாவடிகளில் இருந்து வெளிவரும் வாக்காளர்களிடம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று கேட்டு இவ்வழியில் தேர்தல் முடிவுகளை கணிப்பதை எக்சிட் கருத்துகணிப்பு என்று அழைக்கின்றனர். நமது நாட்டில் இத்தகைய கருத்துகணிப்புகள் அறிவியல் பூர்வமான முறையில் செய்யப்படுவதில்லை. இதனால் அவை நம்பகத்தன்மை அற்றதாகவே உள்ளன. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் சட்ட மன்ற தேர்தல்களிலும் சரி, மக்களவை தேர்தல்களிலும் சரி, எக்சிட் கருத்து கணிப்புகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டும் அனேகமாக அனைத்துமே தவறாகவும் வந்தவண்ணம் உள்ளன. எனினும் எக்சிட் கணிப்பு ஒரு பெரும் வியாபாரமாகவும் லாபம் தரும் தொழிலாகவும் கணிப்பை நடத்தும் முகவர்களுக்கும் ஸ்பான்சர் செய்யும் தொலைகாட்சிகளுக்கும் பெருத்த விளம்பரத்தை தேடித்தருகின்றன. இவை பொதுவாக ஆளும்கட்சிக்கு உள்ள ஆதரவை சற்று கூடுதலாகவே கணிக்கும். காரணம் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வாக்களித்தோர் தங்கள் தேர்வை வெளிப்படுத்த தயங்குவார்கள். இவர்களில் பலர் பதில் அளிக்கமாட்டார்கள். ஆனால் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் முன்வந்து பேசுவார்கள். எடுத்துக்காட்டாக, ஆதித்யநாத் ஆளும் உத்தர் பிரதேசத்தில் நிலவும் சூழலில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் அதனை நிச்சயம் விளம்பரபடுத்த மாட்டார்கள்.

எக்சிட் கணிப்புகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து அறிவியல் அடிப்படையில் கருத்துகேட்கப்படுவோர் பட்டியலை தேர்வு செய்து அவர்கள் வீடுகளுக்கு சென்று அமைதியான சூழலில் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை. பொது இடத்தில் பலரும் இருக்கும் சூழலில் உண்மை தகவல் கிடைப்பது கடினம். அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள இயன்றவர் தரும் தகவல்களை வைத்து கணிக்கின்றனர். இதுவும் தவறான அணுகுமுறை.

எனவே, சுருக்கமாக சொன்னால், எக்சி கணிப்புகளை புரந்த்தள்ளிவிட்டு மே 23 க்கு காத்திருப்பதே சரி. தேவையற்ற மன உளைச்சல்களை தவிர்க்கலாம்.

-Venktesh Athreya


;